இலங்கையில் இருக்கும் இந்திய குடிமக்கள் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்குமாறு இந்திய வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை அறிவுறுத்தியுள்ளது.
புதுடெல்லியில் இன்று செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய வெளியுறவுத்துறையின் பேச்சாளர் அரிந்தம் பாக்சி இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.
இலங்கையில் இந்தியர்களின் பாதுகாப்பை பாதிக்கும் சம்பவங்கள் குறித்து இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் இலங்கையில் உள்ள உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளது.
இது தொடர்பாக இந்திய குடிமக்களுக்கு வழிகாட்டுதலை வழங்கியுள்ளதாக பாக்சி தெரிவித்துள்ளார்.
இந்திய குடிமக்கள் இலங்கையில் இருக்கும்போது கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கவேண்டும்.
எந்தவொரு அத்தியாவசியப் பயணத்திற்கும் நாணய (பண)மாற்றம் மற்றும் எரிபொருள் நிலைமை உள்ளிட்ட அனைத்து தொடர்புடைய காரணிகளையும் அவர்கள் ஆராய வேண்டும் என்று பாக்சி கூறியுள்ளார்.
இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் மிகப்பெரிய ஆதாரமாக இந்தியா இன்னும் உள்ளது.
இந்தநிலையில் அங்குள்ள அனைத்து இந்தியர்களுக்கும் அல்லது அங்கு செல்ல நினைப்பவர்களுக்கும் பொதுவான வழிகாட்டுதலாகவே இந்த எச்சரிக்கை இருக்கும் என்று பாக்சி குறிப்பிட்டார்.
இந்தியாவுக்கு வெளியே உள்ள இந்தியர்கள் சம்பந்தப்பட்ட எந்தவொரு விரும்பத்தகாத சம்பவத்தையும் தடுப்பதே இந்தியாவின் முயற்சியாகும் என்றும் பாக்சி தெரிவித்தார்.
நெருக்கடியான நேரத்தில் இலங்கை மக்களுக்கு ஆதரவாக நிற்பதற்கான தனது நிலைப்பாட்டை இந்தியா மீண்டும் வலியுறுத்தி வருகிறது.
இலங்கைக்கு பொருளாதார உதவிகளை வழங்குவதில் இந்தியா முன்னணியில் இருக்கிறது.
இந்தநிலையில் முடிந்த வரையில் இலங்கை மக்களுக்காக இந்தியா தொடர்ந்து நிற்கும் என்று பாக்சி குறிப்பிட்டுள்ளார்.