தற்போதைய நிதி நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக இலங்கையின் நிதிக் கொள்கை கடுமையாக்கப்பட வேண்டும் எனவும் வரிகளை உயர்த்துவதுடன் நெகிழ்வுத் தன்மையுடன் அந்நிய செலாவணி மாற்றுவீதத்தை கடைப்பிடிக்க வேண்டும் என, சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப் ) தெரிவித்துள்ளது.
முக்கியமான செலவினங்களை நிவர்த்தி செய்வதற்கும், கடன் நிலைத்தன்மையை நோக்கிய முன்னேற்றத்திற்கும் வரி வருமானத்தை அதிகரிப்பதற்கு இலங்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்திய பதில் பணிப்பாளர் அன் மேரி தெரிவித்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நெகிழ்வுத் தன்மையுடன் அந்நிய செலாவணி மாற்றுவீதத்தை பேணிச்செல்ல வேண்டியதன் முக்கியத்தை சுட்டிக்காட்டியுள்ள அவர், பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு இலங்கை நிதிக் கொள்ளையை கடுமையாக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வார இறுதி நாட்களில் இலங்கை பிரதிநிதிகளுடன் சாதகமான கலந்துரையாடலில் ஈடுப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கு வழங்கும் கடனின் மொத்த மதிப்பு அல்லது இலங்கையுடனான பேச்சுவார்த்தைகள் முடிவடைய மதிப்பிடப்பட்ட நேரம் குறித்து சர்வதேச ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.