கைது செய்யப்பட்ட எமது மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சமன் பெரேரா எதிர்வரும் 31ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நேற்றைய தினம் தங்காலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் 5ஆம் திகதி தங்காலை மொரஹட்டியார பகுதியில் நபர் ஒருவரைக் கொலை செய்ததுடன் இருவரைக் காயப்படுத்திய குற்றத்துடன் தொடர்புடைய, சந்தேகநபர் மறைந்திருப்பதற்கு உதவிகளை வழங்கிய குற்றச்சாட்டின் பேரில், நேற்று தங்காலை காவல்துறையினால் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் கொஸ்கொட பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த மே மாதம் 9ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவரின் வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிரிந்திவெல பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவண்ணவின் வீடு மற்றும் சொத்துக்களை சேதப்படுத்தி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் நேற்று இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் 27 மற்றும் 35 வயதுடையவர்கள் என காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், ஹொரணையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்கவின் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் ஹொரணையில் வசிக்கும் 39 வயதுடையவர் என காவல்துறை தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் ரோஹித்த அபேகுணவர்தன ஆகியோரின் வீடுகளுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் 17 மற்றும் 25 வயதுகளையுடைய ரத்மலானை பகுதிகளைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share.
Exit mobile version