கடன் நிவாரணம் தொடர்பான தனது நிலைப்பாட்டை வியத்தகு முறையில் மாற்றிக்கொள்ளுமாறு சீனாவை இலங்கை வலியுறுத்துகிறது என்று இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிக்கேய் ஏசியாவிற்கு (Nikkei Asia) வழங்கிய பிரத்தியேக நேர்காணலில், இது தொடர்பில் சீனாவுடன் உடன்பாட்டை எட்டுவது எளிதான காரியம் அல்ல என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார்.

பொருளாதாரத்தில் திவாலாகிவிட்ட இலங்கையின் சார்பில், நாட்டின் நிதிக் குழுவை வழிநடத்தும் ரணில் விக்ரமசிங்கவுக்கு, இது ஒரு வலிமையான சவாலாக அமைந்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் இன்று புதிய சுற்றுக் கலந்துரையாடல் ஆரம்பமாகியுள்ளது.

இந்தநிலையில், ஏற்கனவே பெற்ற கடனை மறுசீரமைக்க வேண்டியதன் அவசியத்தை, சீன அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளதாக ரணில் விக்ரமசிங்க நிக்கேயிடம் கூறியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான சந்திப்புக்கு மத்தியில், சீனாவின் கடன் மறுசீரமைப்புக் காரணியே இலங்கையின் பொருளாதார அதிர்ஷ்டத்தை வடிவமைக்க உள்ளது என்பது யதார்த்தமான விடயமாகும்.

இலங்கைக்கு பல பில்லியன் டொலர் பிணை எடுப்பு வழங்குவதற்கான வாய்ப்புகள் குறித்து, ஏற்கனவே சர்வதேச நாணய நிதியம், கருத்துக்களை வெளியிட்டுள்ளது.

அதில் பிணை எடுப்புக்கு முன்னர், கடனாளிகளின் போதுமான ‘ஹெயார் கட்’ (முடிவெட்டுதல்) உத்தரவாதங்கள் அவசியம் என்று நிதியம் குறிப்பிட்டுள்ளது.

(கடன் மறுசீரமைப்பை பொருளாதார ஆய்வாளர்கள் ‘ஹெயார்கட்’ என்ற சொற்பதத்தை கொண்டு அழைக்கின்றனர்)

இலங்கையின் மொத்த வெளிநாட்டு கடனில் கிட்டதட்ட 44 சதவீதம் சீனாவிடமிருந்து பெற்ற கடன்களாகும்.

இலங்கையின் தற்போதைய நிலுவையில் உள்ள வெளிநாட்டுக் கடன் 51 பில்லியன் டொலர்கள் ஆகும். தற்போது நாட்டில் 300 மில்லியன் டொலர்களே அந்நிய செலாவணியாக உள்ளன.

இதனைக் கொண்டு, உணவு, எரிபொருள் மற்றும் மருந்து இறக்குமதிகளை மேற்கொள்ளமுடியாது.

இந்தநிலையில் கடந்த ஜூலை மாதத்தில் உணவுப் பணவீக்கம் 82.5% ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் சீனாவுடன் முன்னர் மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் கொண்டிருந்த உறவு தற்போது வீழ்ச்சி கண்டிருக்கிறது.

அண்மையில் சீன கப்பல் ஹம்பாந்தோட்டைக்கு வந்தபோது, இந்தியாவின் அதிருப்தியால், ஏற்பட்ட இலங்கையின் செயற்பாடு, இந்த வீழ்ச்சியை மேலும் ஆழமாக்கியது.

இந்த சூழ்நிலையிலேயே சர்வதேச நாணய நிதிய பிணை மீட்புக்கு சீனாவின் வியத்தகு முடிவை இலங்கை எதிர்பார்ப்பதாக ரணில் குறிப்பிட்டுள்ளார்.

Share.
Exit mobile version