அண்மைய பொருளாதார நெருக்கடி பலரை உச்சத்துக்குக் கொண்டு சென்றது, திடீரென மேலே போனவர்கள் இப்போது கீழ் நோக்கிச் சரிய ஆரம்பித்திருக்கிறார்கள்.

பொருளாதார நெருக்கடியைப் பயன்படுத்தி, தாறுமாறாக விலைகளையும், கட்டணங்களையும் உயர்த்தியவர்களிடம் இருந்து நுகர்வோர் விலகிச் செல்லத் தொடங்கியிருக்கிறார்கள்.

இது இன்றைய நிலையில் சந்தையில் முக்கியமானதொரு பிரச்சினையாக மாறியிருக்கிறது.

டொலர் நெருக்கடி, பணவீக்கம், இறக்குமதிக் கட்டுப்பாடுகள் என்பன போன்ற காரணங்களால், பல்வேறு அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்களின் விலைகள், பல மடங்கு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டது. இது தவிர்க்க முடியாததும் கூட.

ஆனால், இது பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட மக்களின் தாங்கு சக்திக்குப் பெரிதும் சோதனைக்குள்ளாக்கியிருந்தது.

அதன் விளைவாக, மக்களின் நுகர்வுப் பழக்க வழக்கங்களில், கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சந்தையில் பிஸ்கட் பொதிகள் சலுகை விலைக்கு விற்கப்படுவது குறித்து அண்மைய நாட்களில் சமூக ஊடகங்களில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

580ரூபா பொறிக்கப்பட்ட பிஸ்கட் பொதி, 480 ரூபாவாக குறைக்கப்பட்ட விலையில் விற்கப்படும், படத்துடன் பகிரப்பட்ட தகவல் பரவலான கவனத்தை ஈர்த்திருந்தது.

குறித்த பதிவு குறித்து, சமூக ஊடகம் ஒன்றில் பதிவிட்டிருந்த ஒருவர், அவசியமற்ற பொருட்களின் பயன்பாட்டை தவிர்த்தால், அவர்கள் தானாக விலையை குறைப்பார்கள் என்று பதிவிட்டிருந்தார். அதுதான் உண்மை.

மக்களின் நுகர்வுப் பழக்க வழக்கம் மாற்றமடையத் தொடங்கியுள்ள நிலையில், உற்பத்தியாளர்கள் தங்கள் சந்தையை தக்கவைத்துக் கொள்வதற்காக விலைக் குறைப்புக்குச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

சில நாட்களுக்கு முன்னதாக, பிஸ்கட் உற்பத்தியாளர்கள் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தியிருந்தனர். தங்களின் உற்பத்திகளின் விற்பனை விலை அதிகரிப்புக்கான காரணத்தை விபரிப்பதற்காகவே அவர்கள் அந்த செய்தியாளர் சந்திப்பை நடத்தினர்.

டொலர் நெருக்கடிக்கு மத்தியில் உற்பத்திக்காக ‘ஏ’ தர கோதுமை மாவை இறக்குமதி செய்ததன் விளைவாக பல உற்பத்திகளின் விலைகளை அதிகரிக்க நேரிட்டதாக அவர்கள் கூறினார்கள்.

முன்னர் கோதுமை மாவின் விலை 74ரூபாவாக இருந்ததாகவும், தற்போது அதன் விலை 290 தொடக்கம் 300ரூபாவாக உள்ளதென்றும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

கோதுமை மா 277சதவீதம் விலை அதிகரித்துள்ளதால் தான் தாங்களும் விலையை அதிகரிக்க நேரிட்டதாக அவர்கள் நியாயப்படுத்தினார்.

ஆனால் வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வுக்கும், கோதுமை மா உள்ளிட்ட அதற்கான உள்ளீடுகளின் விலை அதிகரிப்புக்கும் இடையில் சமமான நிலை ஒருபோதும் காணப்படுவதில்லை.

இந்த மோசமான நிலையினால், இப்போது வெதுப்பக மற்றும் பிஸ்கட் போன்றவற்றின் நுகர்வில் இருந்து மக்கள் விலகத் தொடங்கியிருக்கிறார்கள்.

அதுபோல, சந்தையில் கோழி இறைச்சி, முட்டை போன்றவற்றின் விலைகள் மிக மோசமாக அதிகரித்திருக்கின்றன.

முட்டை சில இடங்களில் 70 ரூபாவுக்கு மேல் விற்கப்படுவதாகவும், அதனால் முட்டையை இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும், சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் ஒரு கோரிக்கையை விடுத்திருக்கிறது.

கோழி மற்றும் முட்டை உற்பத்தியாளர்களுக்கு, உள்ளீடுகள் கிடைப்பதில் பிரச்சினை உள்ளது. ஆனால் அதனைச் சாதகமாகப் பயன்படுத்தி, மிக மோசமாக விலைகளை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், நகர்வோர் அதிலிருந்து விலகிச் செல்லத் தொடங்கி விட்டனர்.

இந்த நிலை நீடித்தால், நிலைமைகள் இயல்புக்குத் திரும்பினாலும், மக்கள் முன்னரைப் போன்று, செலவழிக்க முன்வரமாட்டார்கள் என்ற கவலை இப்போது பலருக்குத் தொற்றியிருக்கிறது.

உணவுப் பொருட்கள் விடயத்தில் மாத்திரமன்றி எரிபொருள் போன்றவற்றின் நுகர்விலும் கூட இதன் தாக்கம் வெகுவாக உணரப்படுகிறது.

முன்னர், எரிபொருளை இறக்குமதி செய்வற்கு மாதம் 500 மில்லியன் டொலர் தேவைப்பட்டதாகவும்,கியூஆர் குறியீட்டு முறை அமுலுக்கு வந்த பின்னர், அது 230மில்லியன் டொலராக குறைந்து விட்டது என்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபன தகவல்கள் கூறுகின்றன.

எரிபொருள் அதிகளவில் சந்தைக்கு விடப்பட்ட போது முண்டியடித்த மக்கள், எரிபொருள் நிலையங்களில் குழுமியிருந்த மக்களை இப்போது காணவில்லை.

வாகனங்களுக்கு குறித்த அளவு எரிபொருள் கண்டிப்பாக கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டதால், எவரும் இப்போது முண்டியடித்துக் கொண்டு, குவியத் தயாராக இல்லை.

ஆறுலாக தேவைப்படும் போது நிரப்பிக் கொள்கிறார்கள்.

எரிபொருள் இறக்குமதி பாதியாக குறைந்துள்ள போதும், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் முற்றாகவே ஒழிந்து போயிருப்பது ஆச்சரியம்.

இதிலிருந்து, கறுப்புச் சந்தைக்கு எந்தளவு எரிபொருள் சென்றிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இப்போதும் கறுப்புச் சந்தை சுறுசுறுப்பாகத் தான் இருக்கிறது. ஆனால் அவர்கள் நினைத்தது போன்று விலைகளை தீர்மானிக்க முடியவில்லை.

எல்லா தரப்பினருக்கும் வாரத்தில் குறித்த அளவு பெற்றோலைப் பெறக் கூடிய நிலையிருப்பதால், அதற்காக முண்டியடிக்கின்ற நிலை இல்லை. எரிபொருள் நகர்வையும் மக்கள் குறைத்துக் கொள்ளத் தொடங்கியிருக்கின்றனர்.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு கடந்த திங்களன்று வெளியிட்ட தகவல்களின்படி, ஓகஸ்ட் மாதம், முதல் வாரத்தை விட, இரண்டாவது வாரத்தில், குறைந்தளவு கார்களும், வான்களுமே எரிபொருளைப் பெற்றிருக்கின்றன.

அத்துடன், கார்கள், வான்களால் நுகரப்பட்ட எரிபொருள் அளவும் குறைந்திருக்கிறது.

வாரத்தில் குறித்த அளவு எரிபொருள் எல்லோருக்கும் தேவைப்படுவதில்லை. அவ்வாறு பெற்றுக் கொள்ளக் கூடிய பொருளாதார வளமும் எல்லோரிடமும் இல்லை.

பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர், பொருட்களின் விலைகள் உயர்ந்திருக்கின்றன, கட்டணங்கள் உயர்ந்திருக்கின்றன, ஆனால் யாருக்கும் வருமானம் அல்லது சம்பளம் அதிகரிக்கவில்லை.

இதனால், கிடைக்கும் வருமானத்துக்குள் தங்களின் செலவினங்களைச் சுருக்கிக் கொள்வதற்கு முற்படுகின்றனர். அதற்காக அவர்கள் தங்களின் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்வதை விட, வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கின்றனர்.

அண்மைக்காலங்களில் மக்கள் மத்தியில் ஏற்பட்ட நாகரிக மாற்றங்களால் தொற்றிக் கொண்ட பழக்க வழக்கங்கள் வந்த வேகத்திலேயே திரும்புகின்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.

கடுமையாக அதிகரித்த பால்மா விலைகளுக்குப் பின்னர், பால்மா நுகர்வு குறைந்திருக்கிறது. எரிவாயு அடுப்புகள் வெடிப்பு, விலை உயர்வு, மற்றும் தட்டுப்பாட்டுக்குப் பிறகு, விறகு அடுப்பு உள்ளிட்ட மாற்றுச் சக்திகளைக் கொண்டு சமையல் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

அவர்கள் தற்போது அதிக செலவுள்ள எரிவாயுவை தவிர்க்கத் தொடங்கி விட்டனர். இதனால் வர்த்தக நிலையங்களில் எரிவாயு சிலிண்டர்கள் தேங்கத் தொடங்கியிருக்கின்றன.

தட்டுப்பாடு வரப்போகிறது, விலை அதிகரிக்கப் போகிறது என்று சமூக ஊடகங்களிலும் பிற வழிகளிலும் வதந்திகளைப் பரப்பி, வர்த்தக நிலையங்களை வெறுமையாக்கி தங்களின் விற்பனையை பெருக்கிக் கொண்ட, அதனையே ஒரு விளம்பர உத்தியாக மாற்றிக் கொண்ட, வரம்பு மீறிய அளவுக்கு விலைகளை அதிகரித்த நிறுவனங்கள்- இப்போது தள்ளாடத் தொடங்கியிருக்கின்றன.

எங்கே தங்களின் சந்தைகள் பறிபோய் விடுமோ என்று அவர்கள் கலங்கத் தொடங்கியிருக்கிறார்கள். பொருளாதார நெருக்கடிகள், பொருளாதார வீக்கங்கள் அவ்வப்போது, சிலருக்கு திடீர் யோகத்தைக் கொடுத்தாலும், அது நிலையானதாக இருக்காது.

நாடு இன்னமும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளவில்லை, அதிலிருந்து மீள்வதற்கு காலஅவகாசம் தேவைப்படுகின்ற நிவையில் மக்களின் வருமான மட்டத்தை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் இல்லாத நிலையில், அவர்கள் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்வதை விட வேறு வழியில்லை.

மக்களின் அந்த மாற்றம் கொழுத்த இலாபம் பார்த்த -பார்க்கின்ற நிறுவனங்களுக்கு பேரிடியாகத் தான் இருக்கும்.

Share.
Exit mobile version