முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்துக்கு வாடகை விமானம் மூலம் கடந்த வாரம் செல்வதற்கான செலவை இலங்கை அரசாங்கம் செலுத்தியதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்த நிலையில், அந்த செலவில் இலங்கை அரசாங்கம் எவ்வித பங்களிப்பும் செய்யவில்லை என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி தனது வெளிநாட்டு பயணங்களுக்காக தனது சொந்த நிதியை செலவிட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
அமைச்சரவையின் இன்றைய சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவருக்கு பதிலளித்த அமைச்சர் குணவர்தன, இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பு என்பதாலேயே அதற்கான கட்டணத்தை செலுத்தியதாக தெரிவித்தார்.
ஒவ்வொரு நிறைவேற்று முன்னாள் ஜனாதிபதியும் அவர்களது துணைவியார்களும் நன்மைகள், சலுகைகள் மற்றும் சிறப்பு வசதிகளை அனுபவிக்கின்றனர்.
எனவே. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கட்டணத்தை செலுத்த அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.
இந்த சட்டத்தின் விதிகளின் கீழ் முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன,சந்திரிகா குமாரதுங்க மற்றும் ஹேமா பிரேமதாச ஆகியோருக்கு குடியிருப்பு, கொடுப்பனவு மற்றும் ஏனைய வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குணவர்தன வலியுறுத்தினார்.
எதிர்காலத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பினால், ஓய்வுபெற்ற ஜனாதிபதிக்கு உரிய அனைத்து வசதிகளையும் சலுகைகளையும் அரசாங்கம் அவருக்கு வழங்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.