70 சதவீதமான மலையக மாணவர்களின் பெற்றோருக்கு பெருந்தோட்டங்களில் தொழிலில் ஈடுபடாதுள்ளமையால், அவர்களின் பிள்ளைகளுக்கு ஸ்ரீபாத கல்வியல் கல்லூரியில் கல்வி கற்பதற்கான வாய்ப்பு அற்றுப்போயுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீபாத கல்வியல் கல்லூரிக்கு தகைமைபெறும் மலையக மாணவர்களுக்கு அவர்களின் பெற்றோர்களின் ஊழியர் சேமலாப நிதிய மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதிய இலக்கங்கள் அவசியமாகும்.

இந்நிலையில், மலையகத்தில் தற்போது 30 சதவீதமானோர் மாத்திரமே பெருந்தோட்டங்களில் தொழில்புரிகின்ற நிலையில், 70 சதவீதமானோர் பெருந்தோட்டங்களில் தொழிலில் ஈடுபடுவதில்லை.
இதன்காரணமாக, குறித்த 70 சதவீதமான பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு ஸ்ரீபாத கல்வியல் கல்லூரியில் கல்வி கற்பதற்கான வாய்ப்பு இல்லாமல் போகின்றது.

இந்நிலைமையை கருத்தில் கொண்டே, பெருந்தோட்ட தொழிலில் ஈடுபடாத பெற்றோர்களை உடைய மாணவர்களை கல்வியல் கல்லூரிக்குள் அனுமதிக்க, அவர்களின் தாத்தா மற்றும் பாட்டி ஆகியோரின் ஊழியர் சேமலாப நிதிய இலக்கத்தை பயன்படுத்தலாம் அல்லது குறித்த மாணவர்கள் பெருந்தோட்டங்களில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்றிருந்தால் அவர்களை கல்வியியல் கல்லூரிக்குள் உள்ளீர்களாம் என்ற கோரிக்கையை தாம் கல்வி அமைச்சிடம் முன்வைத்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

நேற்று கல்வி அமைச்சுடன் நடத்திய சந்திப்பில், இந்தக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். எனவே, கல்வி அமைச்சினால், விரைவில் இந்தத் திருத்தங்கள் ஏற்படுத்தப்படும் என தாம் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Share.
Exit mobile version