பிரதமர் மஹிந்த ராஜபக்சவைப் பதவி விலகுமாறு கோருவதற்கு எவருக்கும் அருகதை இல்லை என்று முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்சவும், அவர் தலைமையிலான அமைச்சரவையும் உடன் பதவி விலகி சர்வகட்சி அடங்கிய இடைக்கால அரசு அமைய வழிவிட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும எம்.பி. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

“நாட்டின் நெருக்கடி நிலைமைக்குப் பதவி விலகல் தீர்வு அல்ல. கட்சி வேறுபாடின்றி அனைவரினதும் ஒத்துழைப்புத்தான் மிகவும் அவசியம்.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவைப் பதவி விலகுமாறு கோருவதற்கு எவருக்கும் அருகதை இல்லை. அவர் மக்கள் மனதை வென்ற தலைவர்.

தற்போதைய புதிய அமைச்சர்களையும், இராஜாங்க அமைச்சர்களையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே நியமித்தார். எனவே, புதிய அமைச்சரவை தொடர்பில் ஜனாதிபதிதான் தீர்மானம் எடுக்கவேண்டும்.

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் நோக்குடன் எமது கட்சிக்குள் இருந்தும் வெளியில் இருந்தும் சிலர் செயற்படுகின்றனர். அவர்கள் தொடர்பில் நாம் மிகவும் அவதானமாக இருக்கின்றோம்.

நிலையான அரசு அமைய ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version