ரம்புக்கனையில் 19 ம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்கான உத்தரவை தானே பிறப்பித்ததாக கேகாலை பகுதிக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கேபி கீர்த்திரட்ணே ஏற்றுக்கொண்டுள்ளார்.

கேகாலையில் ஆர்ப்பாட்டக்காராகள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை அதில் ஒருவர் கொல்லப்பட்டமை குறித்த ஆரம்பகட்ட விசாரணைகள் கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதியில் காணப்பட்ட எரிபொருள் வாகனமொன்றினை தீயிட்டு கொழுத்துவதற்காக தீப்பெட்டிகள் லைட்டர்களுடன் பலர் வருவதை பார்த்தேன் எரிபொருள் வாகனம் அழிக்கப்படுவதை தடுப்பதற்கான வேறு வழியில்லாததன் காரணமாக முழங்காலின் கீழ் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் இரு எரிபொருள் வாகனங்களிற்கும் பெட்ரோல் நிரப்பும் நிலையத்திற்கும் தீமூட்டியிருந்தால் பெரும் உயிர்ச்சேதமும் சொத்துக்களிற்கு அழிவும் ஏற்பட்டிருக்கும் என தெரிவித்துள்ள பொலிஸ் அதிகாரி உயிரிழப்புகள் குறித்து நானும் எனது பொலிஸ் உத்தியோகத்தர்களும் அச்சம் கொண்டிருந்தோம் என தெரிவித்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற பகுதியில் காணப்பட்ட சிரேஸ்ட அதிகாரி என்ற அடிப்படையில் சட்டபூர்வமான உத்தரவுகளை வழங்கினேன் என அவர் தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version