சென்னை: கொரோனா பாதிப்பு மீண்டும் மெல்ல அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், மாஸ்க் அணிவது தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் கொரோனா 3ஆம் அலை ஏற்பட்டது. ஓமிக்ரான் கொரோனா காரணமாக அப்போது நாட்டில் வைரஸ் பாதிப்பு அதிகமானது.
அந்த சமயத்தில் தினசரி கொரோனா பாதிப்பு லட்சத்தைத் தாண்டியது. நல்வாய்ப்பாக ஓமிக்ரான் அலை டெல்டா கொரோனாவை போல இல்லாமல் விரைவாக முடிவுக்கு வந்தது.
இந்தச் சூழலில் வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் மெல்ல மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதையடுத்து பல மாநிலங்களிலும் மாஸ்க் கட்டாயம் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் மெல்ல அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மாநிலத்தில் 39 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. அதேநேரம் மாநிலத்தில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 256ஆக உயர்ந்து உள்ளது. குறிப்பாகச் சென்னை ஐஐடியில் ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னை ஐஐடியில் கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “மாஸ்க் கட்டாயம் இல்லை என்று தமிழ்நாடு அரசு ஒருபோதும் அறிவிக்கவில்லை. ஆனால், தமிழக அரசு மாஸ்க் கட்டாயம் இல்லை என்று அறிவித்ததைப் போல ஒரு தவறான புரிதல் இங்கு உள்ளது. அறிகுறி இருக்கும் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்யும்படி அறிவுறுத்தி உள்ளோம். முதல்வரும் கொரோனா பரிசோதனையைக் குறைக்கக்கூடாது என்று கூறி உள்ளார்.
இப்போது மாநிலத்தில் 14 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அதைச் சீக்கிரம் 25 ஆயிரமாக அதிகரிக்குமாறு கேட்டுள்ளோம். கொரோனா பாதிப்பு மெல்ல அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர்களுக்கு ஆறு முக்கிய அறிவுறுத்தல்களை அளித்துள்ளோம். பொது இடங்களில் மக்கள் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும், வேக்சின் போட்டுக் கொள்ள வேண்டும். கொரோனா பரிசோதனை முறையாகச் செய்ய வேண்டும். மருத்துவ ரீதியாகவும் தயாராக இருக்க வேண்டும். ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும்,
பொதுமக்களுக்குப் பழக்கங்களில் மாற்றம் கொண்டுவர வேண்டும். சென்னை ஐஐடியில் மட்டும் ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை வைத்துப் பார்க்கும் போது, சென்னையில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது தெரிகிறது. ஆனால் இதைக் கண்டு பதற்றப்பட வேண்டியது இல்லை. மாஸ்க் போட்டு, கைகளை நன்கு கழுவி, தனிமனித இடைவெளியை முறையாகக் கடைப்பிடித்தாலே போதும்’ என்று அவர் தெரிவித்தார்.
(oneindia Tamil)