மின்பாவனையிலான பொது போக்குவரத்து சேவையினை 2030ஆம் ஆண்டு காலப்பகுதியில் 30 சதவீதமளவில் பொது போக்குவரத்து சேவையில் விரிவுப்படுத்த கொள்கை ரீதியில் தீர்மானிக்கப்பட்டு, அதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் 500 பேருந்துகளை கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றில் புதன்கிழமை (10) இடம்பெற்ற கூட்டத்தொடரின் போது பொது போக்குவரத்து சேவை தொடர்பில் சுயாதீன உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எரிபொருள் பற்றாக்குறைக்கு மத்தியில் தற்போது பொது போக்குவரத்து சேவை சிறந்த முறையில் முன்னெடுத்து செல்லப்படுகிறது.
எரிபொருள் பாவனையிலான பொது போக்குவரத்து சேவைக்கு பதிலாக,மின்சாரத்திலான பொது போக்குவரத்து சேவையினை 2030ஆம் ஆண்டு காலப்பகுதியில் 30 சதவீதமளவில் விரிவுப்படுத்த உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அரச மற்றும் தனியார் பேருந்துகளுக்கு தேவையான எரிபொருளை தடையின்றி விநியோகிக்க உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பாடசாலை மாணவர்களின் நலநன கருத்திற்கொண்டு சிசுசரிய செயற்திட்டத்திற்கு மேலதிகமாக கடந்த முதலாம் திகதி முதல் பாடசாலை பேருந்து சேவை முன்னெடுக்கப்பட்டன.
சுன நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளில் உள்ள பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து சேவைக்காக இன்னும் இருவார காலப்பகுதியில் 80 பேருந்துகள் சேவையில் ஈடுப்படுத்தப்படும். அத்துடன் நடுத்தர தரப்பினரது தேவையினை கருத்திற்கொண்டு விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் 500 பேருந்துகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை வழங்கியுள்ளது.500 பேருந்துகளில் 250 பேருந்துகள் கிராமிய புற போக்குவரத்து சேவைக்கு ஈடுப்படுத்தப்படும்.
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தையும்,நாடு தழுவிய ரீதியில் உள்ள புகையிரத நிலையங்களையும் நவீனமயப்படுத்த உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.