திருத்தப்பட்ட பேருந்து கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும்பேருந்து ஊழியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின்பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா தெரிவித்தார்.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு கிடைத்த முறைப்பாடுகளையடுத்து இந்த சோதனை நடத்தப்பட்டது என்றார்.
எனவே, மாகாண பேருந்துகளில் சோதனையிடுவதற்கு அனைத்து நடமாடும் சோதனை அதிகாரிகளை ஈடுபடுத்துமாறு பயணிகள் போக்குவரத்து அதிகாரிகளுக்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மேலும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் இணைக்கப்பட்டுள்ள பல நடமாடும் சோதனை அதிகாரிகள் சோதனைகளில் ஈடுபட்டுள்ளதாக பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
அபராதம் விதிக்கப்பட்டு, சம்பவங்களில் ஈடுபட்ட சில பேருந்து உரிமையாளர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பயணிகளிடமிருந்து வசூலிக்கப்படும் கூடுதல் தொகையை திருப்பிச் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் நிலான் மிரண்டா கூறினார்.
கடந்த வெள்ளிக்கிழமை (5) முதல், மாகாணங்களுக்கு இடையில் சேவையில் ஈடுபடும் சுமார் 100 பேருந்துகளில் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
அண்மைய பேருந்து கட்டணத் திருத்தத்தை மக்கள் தெளிவாகப் பார்க்கும் வகையில் பேருந்துகளுக்குள் காட்சிப்படுத்துமாறு நடத்துநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எமது வரையறுக்கப்பட்ட சோதனை குழுக்களைக் கொண்டு நாடு முழுவதும் சோதனை நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.