பாடசாலை மட்டத்தில் ஜப்பானிய மொழித் திறனை வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இரு நாடுகளுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம் ஜப்பானில் 14 துறைகளில் தொழில் நுட்ப பயிற்சியாளர்களாகவும் வேலைவாய்ப்பிற்காகவும் இலங்கையர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஜப்பானிய மொழியில் திறமை என்பது இந்த நோக்கத்திற்கான இன்றியமையாத தகுதி மற்றும் பல நிலைகளில் நடத்தப்படும் தேர்வுகளில் இருந்து துல்லியமாக தகுதி பெற்றிருக்க வேண்டும்.

விசேட திறன் வேலைத்திட்டத்தின் கீழ் எதிர்வரும் 05 வருடங்களுக்கு ஜப்பானில் சுமார் 345,000 தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதற்காக இலங்கை உட்பட ஏழு (07) நாடுகளுடன் ஜப்பான் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளது.

இதனைக் கருத்திற்கொண்டு, பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படும் தொழில்நுட்ப பாட நெறியின் கீழ் ஜப்பானிய மற்றும் ஆங்கில மொழிகளைக் கற்பிப்பதற்காக, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரின் முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

ஜப்பானில் வேலை வாய்ப்புகளை இலக்காகக் கொண்டு நர்சிங், விருந்தோம்பல், கட்டிடம் சுத்தம் செய்தல், விவசாய நடவடிக்கைகள், மோட்டார் பொறிமுறை அல்லது மின்சாரம் மற்றும் மின்னணு பொறிமுறை போன்ற துறைகளில் மென்மையான திறன்களை வளர்ப்பதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Share.
Exit mobile version