மின் கட்டண அதிகரிப்பை பொதுமக்களால் தாங்கிக்கொள்ள முடியாது என இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அந்த சங்கத்தின் இணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் அறிவுறுத்தியுள்ளது.

மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும், எனினும் மக்கள் தாங்கிக்கொள்ளக்கூடிய அளவில் அந்த கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும்.

சமையல் எரிவாயுவின் விலையை 246 ரூபாவால் குறைத்து, மின் கட்டணத்தை 75 சதவீதத்தால் அதிகரிக்கின்றனர்.

8 வருடங்களாக மின் கட்டணம் அதிகரிக்கப்படாவிட்டால் அதனை அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்.

அதனைவிடுத்து, மக்கள் மீது சுமைகளை ஏற்படுத்துவது சிறந்த விடயம் இல்லை என ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மின்சார கட்டணத்தை 75 சதவீதத்தால் அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார்.

நாட்டில் 78 இலட்சம் நுகர்வோர் மின்சாரத்தை பெறுகின்றனர்.

அவர்களில் 67 இலட்சம் பேர் வீட்டுப்பாவணைக்காக மின்சாரத்தை பெறுகின்றனர். ஏனைய 11 லட்சம் பேர் வர்த்தகம் உள்ளிட்ட பொது செயற்பாடுகளுக்காக மின்சாரத்தை பெறுகின்றனர்.

அத்துடன் வீட்டு பாவனைக்காக மாதாந்தம் மின்சாரத்தை பெறுவோரில் 48 லட்சம் பேர் 90 அலகுகளுக்கும் குறைவான மின்சாரத்தை பயன்படுத்துவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னதாக மின் கட்டணத்தை அதிகரிப்பதற்காக பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்தநிலையில் நாளை முதல் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version