2019 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறு அன்று இடம்பெற்ற மனிதாபிமானமற்ற பயங்கரவாதத் தாக்குதலினால் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்வதோடு, தங்களது அன்புக்குரியவர்களை இழந்து தவிக்கும் அனைவருக்காகவும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றது.

இதன் சூத்திரதாரிகள், இத்தாக்குதலுடன் தொடர்புபட்ட உண்மையான குற்றவாளிகள் மற்றும் அதன் பின்னணியில் செயற்பட்ட அனைவரும் அவசரமாக அடையாளம் காணப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படல் வேண்டுமென்பதுடன், அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டுமென்று உரிய அதிகாரிகளை ஜம்இய்யா வேண்டிக் கொள்கின்றது.

இந்தப் புனிதமான ரமழான் மாதத்தில், உயிரிழந்த அனைவரினதும் குடும்பங்களுக்காகவும், அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்காகவும், அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழவும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆச் செய்யுமாறு அனைத்து முஸ்லிம்களிடமும் ஜம்இய்யா கோட்டுக் கொள்வின்றது

அத்துடன் தற்போது நம் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை நீங்கவும், நாட்டில் அமைதி, சுபீட்சம், அபிவிருத்தி ஏற்பட்டு மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பவும் ஜம்இய்யா பிரார்த்திக்கின்றது.

அஷ்ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம்

பதில் பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Share.
Exit mobile version