இலங்கைக்கு பயணம் செய்ய வழங்கப்பட்ட விசாவை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டி கெய்லி பிரேசரின் கடவுச்சீட்டை இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் கையகப்படுத்தியுள்ளது.தற்போது இப் பெண்ணுக்கு இங்கிலாந்து அரசு உதவிகளை முன்னெடுத்துள்ளது.
மருத்துவ காரணங்களுக்காகவே பிரேசருக்கு இலங்கை வருவதற்கு விசா வழங்கப்பட்டது. எனினும் அவர் காலி முகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை ஊக்குவிக்க விசாவைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதனையடுத்து ஸ்கொட்லாந்து நகரான அபெர்டீனை தளமாகக் கொண்ட தொழிலாளர் நல மையம், ஸ்கொட்லாந்து அரசாங்கத்துடன் இணைந்து ஃப்ரேசரின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் அவரது மனித உரிமைகள் பாதுகாக்கவும் இலங்கை அரசாங்கத்துடன் தொடர்களை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில் கெய்லியின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்பதால் உடனடியாக அவரை இலங்கையில் இருந்து வெளியேறுமாறும் கோரப்பட்டுள்ளது.
அத்துடன் அவரது கடவுச்சீட்டை மீளப்பெறவும் அவர் பிரிட்டனுக்குத் திரும்பும் வரை இலங்கையில் அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்துக்கொள்ளும் முகமாக பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சாரா ஹல்டனுக்கு நேற்று அபெர்டீனை தளமாகக் கொண்ட தொழிலாளர் நல அமைப்பு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.