நுவரெலியா A7 பிரதான வீதியில் இன்று காலை நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா நகரத்திற்கு அண்மித்த பகுதியில் பாரிய மண்சரிவு ஒன்று திடீரென ஏற்பட்டதால் நுவரெலியா – தலவாக்கலை, நுவரெலியா – அட்டன், நுவரெலியா – டயகம போன்ற பிரதேசங்களுக்குச் செல்லும் போக்குவரத்துகள் முற்றாக தடைப்பட்டிருந்தன.

இதனால் சுமார் இரண்டு மணித்தியாலயங்கள் அவ்வீதியினூடான போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமாகியிருந்தன.

இதனையடுத்து, நுவரெலியா வீதி அதிகார சபை ஊழியர்கள், நுவரெலியா இராணுவத்தினர், நானுஓயா பொலிஸார் ஆகியோர் இணைந்து மண்மேட்டை அப்புறப்படுத்தியுள்ளனர்.

இதனால் அப்பகுதியில் ஒரு வழி போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்படுகின்றது. அத்தோடு, இவ்வீதிகளில் பல இடங்களில் ஆங்காங்கே மண்மேடுகள் சரிந்து விழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வீதிகளின் ஊடாக வாகனங்களை செலுத்தும் சாரதிகள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

மேலும் சரிந்து விழுந்துள்ள மண் மேடுகளை உடனடியாக அப்புறப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் மற்றும் சாரதிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Share.
Exit mobile version