நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி மேற்கொள்ளும் சிறந்த நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சியில் அனைத்துத் தரப்பினரோடும் இணைந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமது ஒத்துழைப்பை வழங்க தயாராக இருக்கின்றது.

அத்துடன் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஒன்றிணைந்து வேலைத்திட்டங்களை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதியின் கடித்ததுக்கு சாதகமான பதிலை அனுப்புவதற்கு எதிர்பார்க்கின்றோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையில் பல்வேறு விடயங்கள் பாராட்டுக்குரியவை. நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான சிறந்த சிந்தனைகள் அதில் உள்ளடங்கியிருந்தன. அவற்றை சாத்தியமாக்கும் வகையில் பல்வேறு விடயங்கள் அவரது உரையில் வெளிப்பட்டன.

அனைத்து தரப்பினரதும் யோசனைகளை பெற்றுத் தருமாறு இப்போதும் அவர் கடிதம் மூலம் எமக்குத் தெரிவித்துள்ளார். அவரது வேண்டுகோளுக்கிணங்க அவரது ஆலோசனைகளுடன் மேலும் சில விடயங்களை உள்ளடக்கி நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் வகையில் நாம் எமது யோசனைகளை அவருக்குத் தெரிவிக்கவுள்ளோம்.

அதன் பின்னர் எதிர்க்கட்சியில் அனைத்து தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி அதற்கான உரிய செயற்பாடுகளை நாம் மேற்கொள்வோம்.

Share.
Exit mobile version