நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை அரசியலமைப்பின் 22வது திருத்த வரைவு அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே 21ஆவது திருத்தச் சட்டத்தின் மற்றுமொரு வரைவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதால், இதுவரை 21ஆவது திருத்தம் என்று குறிப்பிடப்பட்ட திருத்தம் உண்மையில் 22ஆவது திருத்தமாகவே இருக்கும்.

கடந்த 2022.06.20 அன்று அரசியலமைப்பின் 22வது திருத்தத்திற்கான ஆரம்ப வரைவுக்கு அமைச்சரவையின் கொள்கை அங்கீகாரம் வழங்கப்பட்டதுடன் அதன்படி 22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் சட்ட வரைவாளரால் தயாரிக்கப்பட்டது.

மேலும் இந்த சட்டமூலம் அரசியலமைப்பிற்கு உட்பட்டது என சட்டமா அதிபரால் தெரிவிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து இந்த திருத்தச் சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் பாராளுமன்றத்தில் ஒப்புதலுக்காக சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

முதலில் ஜூன் 06ஆம் திகதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட திருத்தம், அது தொடர்பான விவாதம் பல தடவைகள் இணக்கப்பாட்டுக்கு வராத காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இவ் அரசியலமைப்பு திருத்தமானது நிறைவேற்று ஜனாதிபதியின் மீது பாராளுமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கும் என்றும், 19 ஆவது திருத்தத்தை இரத்து செய்ததன் பின்னர் ஜனாதிபதிக்கு கட்டுப்பாடற்ற அதிகாரங்களை வழங்கிய அரசியலமைப்பின் 20A ஐ ரத்து செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

22A சட்டத்தின் கீழ், ஜனாதிபதி, அமைச்சரவை மற்றும் தேசிய கவுன்சில் ஆகியவை பாராளுமன்றத்திற்கு பொறுப்புக் கூற வேண்டும். பதினைந்து குழுக்கள் மற்றும் மேற்பார்வைக் குழுக்களும் பாராளுமன்றத்திற்கு பொறுப்புக் கூற வேண்டும்.

இத்திருத்தத்திற்கான முன்மொழிவுகள் ஜூன் 29, 2022 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில் வெளியிடப்பட்டன.

Share.
Exit mobile version