பிபிசிக்கு பேசிய அமைச்சர் நசீர் அஹமட், தற்போதைய அரசாங்கத்துடன் தங்களை இணைத்து விட்டவர் தமது கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம்தான் என்கிறார்.
“பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் வீட்டிடுக்கு 2020ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10ஆம் தேதி மிலிந்த மொரகொடவுடன் (தற்போதைய இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர்) ஒரு தடவை சென்ற முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், அங்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைச் சந்தித்து தனக்குத் தேவையான அனைத்து ஒப்பந்தங்களையும் செய்து முடித்தார்” என்றும் ஹாபிஸ் நசீர் தெரிவித்தார்.

இதேவேளை அரசாங்கம் கொண்டுவந்த அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தத்துக்கு நாடாளுமன்றில் ஆதரவு வழங்குமாறு, நாடாளுமன்ற உறுப்பினர்களான தமக்கு – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்தான் கூறியதாகவும் ஹாபிஸ் நசீர் குறிப்பிட்டார்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய வீட்டுக்கு 2020 ஒக்டோபர் 18ஆம் தேதி பசில் ராஜபக்ஷ வந்து, ஹக்கீமுடன் பேசியதாகவும், அப்போது – தான் உட்பட முஸ்லிம் காங்கிரஸின் 04 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அங்கு இருந்ததாகவும் கூறிய ஹாபிஸ் நசீர் அஹமட்; “அதன்போது முஸ்லிம் காங்கிரஸின் 04 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தத்தை ஆதரித்து நாடாளுமன்றில் வாக்களிப்பார்கள்” என்று, பசீல் ராஜபக்ஷவிடம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் வாக்குறுதி வழங்கியதாகவும் தெரிவித்தார்.

பசில் ராஜபக்ஷவுடனான அந்த சந்திப்பு பகல் 12.16 மணிக்கு ஆரம்பித்து 1.15 வரைக்கும் நடந்ததாகவும் ஹாபிஸ் நசீர் குறிப்பிட்டார்.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு நாடாளுமன்றில் நான் உரையாற்றிய போது, எமது கட்சித் தலைவர் மனச்சாட்சிக்கு அமைவாக வாக்களிக்குமாறு எங்களுக்குக் கூறியுள்ளார் என கூறினேன். அதனை தலைவர் ஹக்கீம் கேட்டுக் கொண்டிருந்தார். நான் கூறியது பொய் என்றால், அவர் என்னை இடைமறித்து, ‘நீங்கள் 20ஆவது திருத்தத்தை எதிர்த்து வாக்களிக்க வேண்டும்’ எனக் கூறியிருக்கலாமல்லவா? ஆனால் அவர் அதனைச் செய்யவில்லை. காரணம், அவரின் உத்தரவுக்கு அமைவாகத்தான் அன்று 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக நாம் வாக்களித்தோம்” எனவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறு தம்மை அரசாங்கத்தின் பக்கம் செல்லுமாறு கூறிவிட்டு, இப்போது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தன்னை குற்றப்படுத்திக் கூறுவது – எந்தவகையில் நியாயம் எனவும் ஹாபிஸ் நசீர் கேள்வியெழுப்பினார்.

Share.
Exit mobile version