நடுக்கடலில் பழுதாகி நின்ற ராமேஸ்வரம் மீன்பிடி விசைப் படகை மீனவர்களுடன் மீட்ட இலங்கை கடற்படையினர் படகின் பழுதை சரி செய்த பின் படகில் இருந்த மீனவர்களுக்கு உணவளித்து பத்திரமாக ராமேஸ்வரம் திருப்பி அனுப்பியுள்ளனர்.

இலங்கை கடற்படையின் இந்த மனிதாபிமான செயல் ராமேஸ்வரம் மீனவர்கள் மட்டுமல்லாமல் தமிழக மீனவர்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.

கடந்த சனிக்கிழமை (30) ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

சனிக்கிழமை இரவு சுமார் 11 மணியளவில் திடீரென படகொன்றிலுள்ள இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக படகில் கடல் நீர் புக ஆரம்பித்தயைடுத்து படகு மெல்ல மெல்ல கடலுக்குள் மூழ்க தொடங்கியது.

அதை கவனித்த அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் உடனடியாக மீனவர்களை பத்திரமாக மீட்டுள்ளனர்.

இந்நிலையில் பழுதான படகை இலங்கை கடற்படை வீரர்கள் சர்வதேச கடல் எல்லை வரை இழுத்து வசென்று படகின் உரிமையாளர் அனுப்பி வைத்த படகில் மீனவர்களையும் படகையும் பத்திரமாக ஒப்படைத்தனர்.

நடுக்கடலில் பழுதாகியிருந்த படகில் இருந்த மீனவர்கள் 6 பேருக்கும் இலங்கை கடற்படையினர் உணவு உள்ளிட்டவைகளை வழங்கி அவர்களுக்கு முழு உதவி செய்து பத்திரமாக ராமேஸ்வரம் திருப்பி அனுப்பினர்.

இலங்கை கடற்பரப்பில் படகு பழுதாகி நின்ற தமிழக மீனவர்களுக்கு உணவளித்து பத்திரமாக திருப்பி அனுப்பிய நிகழ்வு ராமேஸ்வரம் மீனவர்கள் மட்டுமல்லாமல் தமிழக மீனவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Exit mobile version