மீண்டுமோர் அமைச்சரவை மாற்றத்தை பொது மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, தற்போதைய காலநிலையில் வெறுமனே தலை மாற்றத்தை ஏற்றுக்கொள்ள பொதுமக்கள் தயாராக இல்லை எனவும் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (17) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கத்தின் நடத்தையால் அதிருப்தி அடைந்துள்ள மக்கள், ஒட்டுமொத்த அமைச்சரவையையும் இராஜினாமா செய்யுமாறு கோரியுள்ளனர் என்று தெரிவித்த அவர், நாட்டை நடத்துவதற்கு ஒரே மாதிரியானோர் தொடர்வதை ஏற்க முடியாது என்றும், அது பொதுமக்களின் உணர்வைப் பிரதிபலிக்காது என்றும் கூறினார்.
அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் உள்ளடங்கியுள்ள அனைத்து விவரங்களையும் அறியாமல் கையொப்பமிடத் தயாராக இல்லை எனவும் வெற்று ஆவணத்தில் கையெழுத்திடுவார்கள் என்று எதிர்க்கட்சிகள் எதிர்பார்க்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.
பிரேரணையை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தில் எந்தவொரு கட்சிக்கும் 113 வாக்குகள் தேவைப்படும் என்பதால் ஏனைய கட்சிகளுடன் முதலில் கலந்துரையாடல்களை நடத்த வேண்டும் எனவும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவையும் பெற வேண்டும் எனவும் தெரிவித்தார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என்றாலும், அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதே காலத்தின் தேவையாகும் என்றார்.